எழுத்துரிமை பறிக்கப்பட்டதாக பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு: ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ என விமர்சனம்
கன்னட நாளிதழில் தான் எழுதி வந்த புகழ் பெற்ற தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டதற்கு பின்னணியில் கண்ணுக்குப் புலப்படாத கைகள் உள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ என்ற வர்ணனையுடன் இது தொடர்பாக பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ், “தொடர் நிறுத்தப்பட்டதற்கு பின்னணியில் உள்ள கைகளுக்கு சொந்தக்காரர்களே..! உங்களது ஒவ்வொரு செயல் மூலமாகவும், நீங்கள் அணிந்துள்ள முகமூடிக்கு பின்னால் உள்ள உங்கள் முகத்தை மக்கள் தெளிவாகப் பார்த்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
என் வாசகர்களோடு உரையாட நான் பயன்படுத்தி வந்த தளத்தை முடக்குவதன் மூலம், அவர்களோடு நான் கொண்டுள்ள உறவைப் பிரித்துவிட இயலும் என நினைக்கிறீர்களா? எனவும் அவர் வினவியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் சமூகம் சார்ந்த தனது கேள்விகளை #JustAsking என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். எனவே தனது டிரேட்மார்க் ஹேஷ்டேக் #JustAsking மூலம் அவர் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் ஹெக்டே போன்றவர்களின் பேச்சுகளை பிரகாஷ்ராஜ் கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.