தென் இந்தியாவுக்கு பெருமை: பாரிவேந்தர் புகழாரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைக்குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு தேர்வு செய்யப்பட்டிருப்பது, தென் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை என இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடுவுக்கு அறிமுகம் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து 4 முறை எம்பியாகவும், இருமுறை கட்சியின் தேசிய தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் வெங்கய்யாவுக்கு இருப்பதாகவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக வெங்கய்ய நாயுடு இருந்ததை சுட்டிக் காட்டியுள்ள அவர், பழகுவதற்கு எளிமையானவர் என்பதால், அனைத்துக் கட்சியினருடனும் நல்லுறவைப் பேணிகாத்து வருகிறார் என்றும் பாராட்டியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் மக்களிடம் எடுத்துச் சென்று புரிதலை ஏற்படுத்தியதில் வெங்கய்ய நாயுடுவுக்கு முக்கிய பங்கு உள்ளதாக பாரிவேந்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.