எம்.எல்.ஏ எதிர்ப்பு - பாதியில் வெளியேறினார் ஆளுநர்
புதுச்சேரியில் ஆய்வு மேற்கொண்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்ததால் அவர் பாதியிலேயே வெளியேறினார்.
புதுச்சேரியில் அரசு, கவர்னர் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. சமீபத்தில் சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, தனது அனுமதியின்றி அரசு அதிகாரிகள் யாரும் கவர்னர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது. அரசின் அனுமதியின்றி தொகுதிக்கு கிரண்பேடி ஆய்வு செய்ய வந்தால் எம்.எல்.ஏ.,க்கள் அதனை எதிர்த்து போராட வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் காலையில் உழவர்கரை பகுதியில் கிரண்பேடி தூய்மை பணிகளை ஆய்வு செய்ய சென்றார். இதனை அறிந்த அப்பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலன் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆய்வு தொடர்பாக கிரண்பேடியை முற்றுகையிட்டு, கேள்வி எழுப்பிய அவர், ஆய்வு மேற்கொள்ளக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பிச்சைவீராம்பட்டி பகுதியில் ஆய்வு பணிகளை பாதியில் கைவிட்ட கிரண்பேடி, அங்கிருந்து வெளியேறினார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த கிரண்பேடி, புதுச்சேரியை தூய்மைப்படுத்தும் தனது பணி தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.