இரு துருவங்களில் இஸ்லாமிய இயக்கங்கள்: சிறுபான்மையினர் வாக்குவங்கி சிதறுமா?
எதிரெதிர் அணிகளில் களமிறங்கும் இஸ்லாமிய இயக்கங்களால், சிறுபான்மையினர் வாக்குகள் பிரியுமோ என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய இஸ்லாமிய இயக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் அமமுக கூட்டணியில் இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ போட்டியிடுகிறது. இதனால் எதிரெதிர் கூட்டணிகளில் இஸ்லாமிய அமைப்புகள் இடம்பெற்றுள்ளதால், சிறுபான்மையினர் வாக்குகள் சிதறுமா என சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அமமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவரான தெஹ்லான் பாகவி, பாஜகவை எந்நிலையிலும் ஆதரிக்காத அமமுகவுக்கே அனைத்து இஸ்லாமியர்களின் ஆதரவும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், மத்திய ஆட்சியின் மீதும், மாநில ஆட்சியின் மீதும் பெரும்பாலான மக்களிடம் அதிருப்தி நிலவுவதால், சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என பிரித்து பார்க்காமல், அனைவரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள் என இந்தியன் யூனியன் முஸ்லீம் லிக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.
மாறுபட்ட கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் கோலகல ஸ்ரீனிவாஸ், தமிழகத்தில் சிறுபான்மையினர் உள்ளனர், ஆனால் சிறுபான்மையினருக்கு என வாக்குவங்கி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.