யோகியிடம் ஆசிபெற்ற காவல் அதிகாரி - வைரலாகும் படம்
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் காவல்துறை அதிகாரி ஒருவர் மண்டியிட்டு, ஆசிபெற்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குரு பூர்ணிமாவை முன்னிட்டு, கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது, அங்கு வந்த பிரவீன் குமார் என்ற காவல் அதிகாரி, யோகி ஆதித்யநாத் முன் மண்டியிட்டு ஆசிபெற்றார். பின்னர், யோகியின் நெற்றியில் திலகமிட்டதுடன், அவருக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி பிரவீன் சிங் கூறுகையில், “நான் கோரக்நாத் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். என்னுடைய பணிகள் முடிந்த பின்னர், முழு அர்ப்பணிப்புடன் கோயிலுக்குள் சென்றேன். அங்கு அவரிடம்(யோகி) நிறைய பேர் ஆசிர்வாதம் வாங்க காத்திருந்தார்கள். என்னுடைய வழிபாடுகளை முடித்து, பெல்ட், தொப்பி உள்ளிட்ட அடையாளங்களை கழட்டிவிட்டு, தலையை கைக்குட்டையால் கட்டிக் கொண்டு ஆசிர்வாதம் பெற்றேன்.” என்று விளக்கம் அளித்தார்.