சென்னை: முறையான கொரோனா முன்னெச்சரிக்கை இல்லாமல் நடந்த தபால் வாக்குப்பதிவு

சென்னை: முறையான கொரோனா முன்னெச்சரிக்கை இல்லாமல் நடந்த தபால் வாக்குப்பதிவு
சென்னை: முறையான கொரோனா முன்னெச்சரிக்கை இல்லாமல் நடந்த தபால் வாக்குப்பதிவு

சென்னை காவல்துறையினரின் தபால் வாக்குப்பதிவு காலதாமதத்துடன் தொடங்கி நடந்து வருகிது. வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ள காவல்துறையினர் தமிழகம் முழுவதும் தபால் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். சென்னை காவல்துறையினருக்கு இன்று தபால் வாக்குப்பதிவு செய்வது தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. ஆர்கே நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் தண்டையார்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கள் தபால் வாக்கை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக்கல்லுாரியிலும், வில்லிவாக்கம் தொகுதியில் வசிக்கும் காவல்துறையினர் ஐசிஎப் உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும், திருவிக தனித்தொகுதியைச் சேர்ந்தவர்கள் பெரம்பூர், சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், எழும்பூர் தனித் தொகுதியைச் சேர்ந்தவர்கள் புரசைவாக்கம் ராட்லர் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ராயபுரம் தொகுதியைச் சேர்ந்தவர்கள் ராயபுரம் மாதா சர்ச் ரோட்டில் உள்ள புனித பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளியில் தங்கள் தபால் வாக்கை பதிவுசெய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் துறைமுகம் தொகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் பிராட்வே பிரகாசம் சாலையில் பாரதி மகளிர் கல்லுாரியிலும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு டாக்டர் பெசன்ட் ரோட்டில் உள்ள உயர்நிலைப்பள்ளியிலும், ஆயிரம் விளக்கு தொகுதிக்கு நுங்கம்பாக்கம் ராஜாஜி வடக்கு சாலையில் உள்ள சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், அண்ணாநகர் தொகுதிக்கு அரும்பாக்கம், டிஜி வைஷ்ணவா கல்லுாரியிலும், விருகம்பாக்கம் தொகுதிக்கு அங்குள்ள மீனாட்சி இன்ஜினியரிங் கல்லுாரியிலும், சைதாப்பேட்டை தொகுதிக்கு நந்தனம் அரசு கலைக்கல்லுாரியிலும், திநகர் தொகுதிக்கு கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், சென்னை உயர்நிலைப்பள்ளியிலும், மயிலாப்பூர் தொகுதிக்கு ஆர்மே மடம் சாலையில்
உள்ள ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், வேளச்சேரி தொகுதிக்கு திருவான்மியூர், பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப் பள்ளியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகளில் 9 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கப்படவில்லை.

தேர்தல் அதிகாரி, ஊழியர்களே காலதாமதமாகத்தான் வந்தனர். ஒவ்வொரு தேர்தலுக்கும் காலதாமதமாகத்தான் தபால் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வாக்குப்பதிவு நாளன்று அதற்கான விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

ஆனால் காவல்துறை தபால் வாக்குப்பதிவு செய்யும் சைதாப்பேட்டை தொகுதிக்கான வாக்குச்சாவடி மையமான நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் எந்த விதமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. கைகழுவதற்கான சானிடைசர் வைக்கவில்லை. பலர் முகக்கவசங்கள் அணியவில்லை. கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கைகள் எதுவும் வைக்கவில்லை. இதே நிலைதான் மற்ற வாக்குச்சாவடிகளிலும் காணப்பட்டதால் இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

எழும்பூர் (தனி) தொகுதிக்குட்பட்ட காவல்துறையினர் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்காக புரசைவாக்கம் ராட்லர் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறையினர் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவுசெய்தனர். வாக்குப்பதிவு செய்யவரும் காவல்துறையினரின் உடல் வெப்பநிலையை கண்டறிய வெப்பநிலை கருவி, முகக் கவசங்கள், சானிடைசர் ஆகியவற்றை நுழைவாயில் பகுதியில் தேர்தல் ஊழியர் வைத்திருந்தார். ஆனால் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதனை மற்றும் சானிடைசர் வழங்கப்படவில்லை. கொரோனா தடுப்பு நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. காவல்துறையினரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் விளக்கு தொகுதிக்காக வாக்குகளை பதிவுசெய்ய நுங்கம்பாக்கம் ராஜாஜி வடக்கு சாலையில் உள்ள சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு தபால் வாக்குகளை பதிவுசெய்ய வந்த காவல்துறையினர் பலருக்கு பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லாததால் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு பெயர்களை பதிவுசெய்து அதன்பிறகு வாக்களிக்க தேர்தல் ஊழியர்கள் அனுமதித்தனர். சென்னையைப் பொருத்தவரை காவல்துறையில் மட்டும் 6 ஆயிரம் தபால் வாக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com