அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம் : பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அழுகிய நிலையில் முட்புதருக்குள் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்த பெண்மணி யார் என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியார் நூற்பாலைக்கு சொந்தமான வாகன காப்பகத்தின் பின்புறம் ஊழியர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியை சுற்றி தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியாளர்கள் வேலைக்கு சென்றபோது அதிகமான துர்நாற்றம் வீசி உள்ளது. நாற்றம் வந்த இடத்திற்கு அருகே சென்று பார்த்த போது, இறந்த நிலையில் பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது.
ஆலை நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் தெற்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் அழுகிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. நீல நில சட்டையும், நீல நிறத்தில் பூ போட்ட சேலையும் அணிந்தவரின் முகம் சிதைந்து உடல் வீங்கிய நிலையில் சடலம் கிடந்தது. அப்பெண் இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலத்தின் அருகே ரூபாய் நோட்டுகளும் குருணை மருந்து பாட்டிலும் இருந்ததால் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து இந்த இடத்தில் வீசிவிட்டு சென்றார்களா என்று பல கோணத்தில் தெற்கு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.