மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் வாய் திறந்தார் ஓ.பி.எஸ்.
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒழுங்குமுறை சட்டத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
முதல்வர் பதவியிலிருந்து ராஜினமா செய்த ஓ.பி.எஸ், சசிகலா குடும்பத்திற்கு எதிராகவும், அதிமுக அம்மா அணிக்கு எதிராகவும் போர்க்கொடி உயர்த்திவருகிறார். அவருக்கு மத்திய அரசு முழு ஆதரவு கொடுத்துவருவதாக தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. ஜெயலலிதா எதிர்த்துவந்த திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் படிப்படியாக அமல்படுத்தியபோதும், ஓ.பி.எஸ். எதுவும் பேசவில்லை. பிரதமர் மோடியை டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் சந்திக்க முயற்சி செய்தனர். தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அவர்களை எல்லாம் சந்திக்க மறுத்த பிரதமர், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்தார். இது தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விதமான சந்தேகங்களைக் கிளப்பியது. இதுபோன்ற சம்பவங்கள் ஓ.பி.எஸ். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளார் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.
இவ்வாறு அமைதி காத்துவந்த ஓ.பி.எஸ். மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2001 - 2006 ஆட்சி காலத்தில் கோவில்களில் ஆடு, மாடு பலியிடுவதை ஜெயலலிதா தடை செய்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பிதால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அந்தத் தடை திரும்பப் பெறப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

