காங்கிரஸின் அவுரங்கசிப் ஆட்சிக்கு வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி விமர்சனம்
காங்கிரஸ் கட்சியின் அவுரங்சிப் ஆட்சிக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்ததை விமர்சிக்கும் வகையில் மோடி இந்த கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும் குஜராத் தேர்தல் பரப்புரையின் போது மணிசங்கர் அய்யரின் கருத்தினை சுட்டிக்காட்டி பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர்களே அது ஒரு கட்சி அல்ல, குடும்ப ஆட்சி என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். எங்களுக்கு அவுரங்கசிப்பின் ஆட்சி தேவையில்லை என்று கூறினார்.
ராகுல் காந்தி மீண்டும் தலைவராவது குறித்து நேற்று பேசிய பிரதமர் மோடி ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சியில் முதலில் கடை பிடியுங்கள் என்று விமர்சித்தார். போட்டியில்லாமல் தேர்தல் நடைபெறுவதை சுட்டிக்காட்டி இந்த கருத்தினை தெரிவித்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மணிசங்கர் அய்யர் இந்த தேர்தல் குறித்து கூறும்போது, “ஷாஜகானுக்கு பதிலாக ஜஹாங்கீர் ஆட்சிக்கு வந்தபோது தேர்தல் நடைபெற்றதா?. அதேபோல், ஷாஜகானுக்கு பதிலாக அவுரங்கசிப் ஆட்சிக்கு வந்தபோது தேர்தல் நடைபெற்றதா?. இதுதான் மன்னர்களின் மகன்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்ட வரலாறு. ஆனால் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. யார் வேண்டுமானாலும் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடலாம். இது முற்றிலும் ஜனநாயக முறை. முகலாயர் ஆட்சியையும், இதனையும் ஒப்பிட வேண்டாம்” என்று கூறியிருந்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு தாக்கல் யாரும் செய்யவில்லை என்றால் தேர்தல் நடைபெறாது.