''அம்பயர் மீது பழிபோடும் கிரிக்கெட் அணி போல'' - எதிர்க்கட்சிகளை விமர்சித்த பிரதமர் மோடி
தேர்தலில் தோற்று விடுவோம் என்று தெரிந்துவிட்டதையடுத்து தேர்தல் ஆணையத்தை எதிர்க்கட்சிகள் தற்போது தூற்றத் தொடங்கியுள்ளன என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ரோதக்கில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “முதல் 3 கட்டத் தேர்தல்களிலும் எதிர்க்கட்சிகள் தம்மை விமர்சித்து வந்ததாகவும், தற்போது தோல்வி நிச்சயம் என்ற அச்சத்தில் தேர்தல் ஆணையத்தையும் மின்னணு வாக்கு இயந்திரத்தையும் குறை கூறுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கிரிக்கெட் போட்டியில் தோல்வியுறும் அணிகள் சில சமயங்களில் அம்பயர்களின் முடிவு மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்வது போல எதிர்க்கட்சிகள் நடந்து கொள்கின்றன என்றார். இதையடுத்து இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் பேசிய அவர், 1984ல் சீக்கியர் படுகொலைகளை சாதாரணமானதுதான் எனக் கூறிய காங்கிரஸ் பிரபல தலைவர்களில் ஒருவரான சாம் பிட்ரோடா பேச்சு குறித்து விமர்சித்தார். மேலும் சீக்கியர்களை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சியின் குணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றும் மோடி விமர்சனம் செய்தார்.