பரப்புரைக்காக தமிழகம் வருகின்றனர் பிரதமர் மோடி, ராகுல் காந்தி!
சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வருகை தர உள்ளனர்.
வரும் 30-ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற உள்ள பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார். உடுமலை சாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மோடி உரையாற்ற உள்ளார். மேலும், ஏப்ரல் இரண்டாம் தேதி மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திலும் மோடி பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதே நாளில் நாகர்கோவிலிலும் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொள்கிறார். இதேபோல, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியும் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார். வரும் 28-ஆம் தேதி சென்னை - வேளச்சேரி தொகுதியில் ராகுல் வாக்கு சேகரிக்க உள்ளார்.
மேலும், சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற உள்ள பரப்புரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் தோன்ற உள்ளனர். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளனர்.