வானில் தோன்றிய சிவப்பு அதிசயம்.. கேமராவில் சிக்கிய அரிய காட்சி.. RED SPRITES என்றால் என்ன?
செய்தியாளர் - வெற்றிச்செல்வி
வானத்திலிருந்து சிவப்பு நிறத் தூண்கள் கீழே இறங்குவது போன்ற ஒரு வியக்க வைக்கும் காட்சி... அதாவது, பார்ப்பதற்கு ஏதோ விண்வெளியில் நடக்கும் அதிசயம்போலத் தோன்றும் இந்த அரிய நிகழ்வை, தனது கேமராவில் படம்பிடித்திருக்கிறார் பிரான்ஸைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர்.
ஸ்பெயின் கடற்கரைப் பகுதியில் இடியுடன் கூடிய புயல்களுக்கு மேலே தோன்றிய இந்தச் சிவப்பு ஒளிகள், தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. இந்தப் புகைப்படத்தில் தெரியும் ஒளிகள் சாதாரண மின்னலோ, விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி வரும் ஒளிக்கற்றைகளோ கிடையாது. பூமியின் வளிமண்டலத்தின் உயரமான பகுதியில் ஏற்படும் Red Sprites என்று அழைக்கப்படும் அரிய மின்சார நிகழ்வாகும்.
இந்த அரிய சிவப்பு ஒளித் தூண்களை, புகைப்படக் கலைஞரான Florian Riou, பிரான்ஸின் Corsica தீவிலிருந்து, சுமார் 500–700 கி.மீ. தொலைவில் ஸ்பெயின் அருகே படம்பிடித்துள்ளார். இவ்வளவு தொலைவில் நிகழ்ந்த ஓர் ஒளி நிகழ்வைத் துல்லியமாகப் படம்பிடித்திருப்பதுதான் இந்தப் புகைப்படத்தின் சிறப்பாகும்.
பொதுவாக, நாம் பார்க்கும் மின்னல், மேகங்களுக்குள்ளோ அல்லது மேகத்திலிருந்து தரையை நோக்கியோ பாயும். ஆனால் இந்த Red Sprites, இடியுடன் கூடிய மேகங்களுக்கு மேலே, பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 50 முதல் 90 கிலோமீட்டர் உயரத்தில் உருவாகின்றன.
புயலின்போது ஏற்படும் சக்திவாய்ந்த மின்னல், வளிமண்டலத்தின் மேல்பகுதியில் உள்ள வாயு மூலக்கூறுகளைத் தூண்டுவதால், இந்தச் சிவப்பு ஒளித் தூண்கள் உருவாகின்றன. இவை சிவப்பு நிறத்தில் தெரிவதற்கு வளிமண்டலத்தில் இருக்கும் நைட்ரஜன் மூலக்கூறுகள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. இந்த ஒளிகள் நேரான தூண்கள்போல, மரக்கிளைகள் விரிவதைப் போலவும், ஜெல்லி மீன்கள் போன்ற வடிவத்திலும் தோன்றும். சில நேரங்களில், வானத்தில் செங்குத்தாகப் பல கிலோமீட்டர் உயரத்துக்கும் இவை விரிந்து காணப்படும்.
இவற்றைப் பார்ப்பதும் கேமராவில் பதிவு செய்வதும் அவ்வளவு எளிதல்ல. இந்த ஒளிகள் தோன்றிய சில மில்லி விநாடிகளிலேயே கண் இமைப்பதற்குள் மறைந்துவிடும். தரையிலிருந்து பார்க்கும்போது, புயல் மேகங்களே இந்த ஒளிகளை மறைத்துவிடலாம். எனவே, தொலைவில் புயல் ஏற்படும் பகுதிகளைப் பார்வையிட்டு, வானம் தெளிவாகத் தெரியும் இடத்திலிருந்து சரியான கோணத்தில் கேமராவை வைத்து படம் எடுக்க வேண்டும்.
1989-ஆம் ஆண்டில்தான், வானத்தில் தோன்றும் இந்தச் சிவப்பு ஒளிகளை விஞ்ஞானிகள் முதன்முறையாகக் கருவி மூலம் நம்பகமாகப் பதிவு செய்தனர். அதிலிருந்து, இந்த ஒளிகள் எப்படி உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் Florian Riou இவ்வரிய காட்சியை மீண்டும் படம் பிடித்திருப்பது, உலகம் முழுவதும் பேசுபொருளாகியிருப்பதுடன் கவனமும் ஈரத்து வருகிறது.

