திமுகவின் போராட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
திமுகவின் மனிதசங்கிலி போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை (ஜூலை 27) மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்த திமுக முடிவு செய்துள்ளது. மேலும் இப்போராட்டத்தில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் எனவும் திமுக அழைப்பு விடுத்திருந்து. போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன.
இதனிடையே திமுக-வின் மனித சங்கிலி போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் சத்தியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் நீட் தேர்விற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது ஏற்புடையதல்ல என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி கோரிய திமுக-வின் மனு காவல்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, கருப்பு சட்டை அணிந்து பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அமைதியாக போராடினால் அதனை எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பினர். போராட்டக்காரர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் காவல்துறை தலையிடலாம் எனவும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், போலீசார் தரப்பில் இந்த போராட்டத்திற்கு அனுமதி தரப்படாததால் சத்தியமூர்த்தியின் மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் திமுக-வின் மனித சங்கிலி போராட்டத்திற்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.