பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கருணை காட்டுங்கள்: சோனியாவுக்கு நீதிபதி கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க, கருணை காட்டும் படி அவர்களுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த மாதம் 18-ஆம் தேதி இந்த கடிதத்தை அவர் எழுதியுள்ளார். மேலும், ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையில் பெரும் குளறுபடிகள் இருந்ததாகவும் தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 26 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க 2014-ஆம் ஆண்டு தமிழக அரசு முடிவு செய்ததையும், அதை மத்திய அரசு எதிர்த்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சோனியாவும், ராகுலும் அவர்களை விடுவிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டால், 7 பேரின் விடுதலைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சோனியா மட்டுமே உதவ முடியும் என்று தனக்கு தோன்றுவதாகக் கூறியுள்ள நீதிபதி கே.டி. தாமஸ், அவர்களது தண்டனையை உறுதி செய்த நீதிபதி என்ற முறையில், இது கருணை காட்ட வேண்டிய தருணம் என்று தற்போது கருதுவதாலேயே இந்த கடிதத்தை எழுதுவதாகக் கூறியுள்ளார்.
குற்றவாளிகளிடமிருந்து 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் மன்னிக்க முடியாத குறைபாடுகள் இருப்பதை சிபிஐ விசாரணை சுட்டிக்காட்டியதாக நீதிபதி தாமஸ் தெரிவித்துள்ளார். அண்ணல் காந்தியடிகளின் கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோபால் கோட்சே 14 ஆண்டு சிறைத்தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதை தாமஸ் சுட்டிக்காட்டியுள்ளார். கொலை செய்யப்பட்டது ராஜீவ் போன்ற உயர் பதவி வகித்தவராக இல்லாவிட்டால், வழக்கில் தீர்ப்பு எப்படி வந்திருக்கும் என்பது குறித்து தன்னிடம் பதிலில்லை என்றும் தாமஸ் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணையின் போது சிபிஐ விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறியுள்ள நீதிபதி கே.டி. தாமஸ், குற்றவாளிகளுக்கு, அந்த சமயத்தில் மிகப்பெரும் தொகையான 40 லட்சம் ரூபாய் எப்படி வந்தது என்பது குறித்து சிபிஐ கண்டுபிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தண்டனையை உறுதி செய்த அமர்வில் இருந்த தான் உள்ளிட்ட 3 நீதிபதிகளும், தங்களது தீர்ப்பில், சிபிஐக்கு குட்டோ, பாராட்டோ தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும், ஆனால், நீதிபதி வாத்வா தனது தீர்ப்பில் சிபிஐ அதிகாரி டி.ஆர். கார்த்திகேயனை பாராட்டி எழுதியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர் வீக் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில், 40 லட்ச ரூபாயை சந்திராசுவாமி கொடுத்தார் என்று விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறியுள்ளதை தாமஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், சந்திரா சுவாமியைப் பற்றிப் பேச வேண்டாம் என சிபிஐ அதிகாரி ஒருவர் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாகக் கூறியுள்ளதையும், நீதிபதி கே.டி. தாமஸ் கூறியிருக்கிறார். ராஜீவ் கொலையில் சந்திராசுவாமியின் பங்கு குறித்து விசாரிக்காதது இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் தோல்வி என்றும், அதில், மன்னிக்க முடியாத குளறுபடிகள் இருப்பதாக தன்னை தீவிரமாக உணர வைத்ததாகவும் கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.