“விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளுங்கள்” - நாராயணசாமி
அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
விமானப் பயணத்தின்போது பாஜகவுக்கு எதிராக அக்கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை முன்பு சோபியா பெலிக்ஸ் என்ற பெண் முழக்கங்களை எழுப்பினார். இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட சோபியாவை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் குரல் எழுப்பியதாக கைது செய்யப்பட்ட சோபியாவுக்கு ஆதரவாக பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சோபியா கைது செய்யப்பட்டதற்கு எதிராக கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும். விமர்சனம் செய்பவர்களின் குரல்வளையை நெறிக்கக் கூடாது. அப்படி செய்தால் ஜனநாயகத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். அப்படி இருந்தால் அது சர்வாதிகாரம் தான்” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.