கோட்சே பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்

கோட்சே பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்
கோட்சே பற்றிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்

நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும், அந்த கருத்தால் யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாகூர் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் கோட்சே குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரக்யா சிங், “நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தராக இருந்தார். அவர் தேசபக்தராகவே இருக்கிறார். தேசபக்தராகவே இருப்பார். கோட்சேவை தீவிரவாதி என்று கூறியவர்களுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என பிரக்யா சிங் தாகூர் கூறியதற்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்தது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என்றும் இது தொடர்பாக பிரக்யா சிங்கிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் கூறினார். 

பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தம்முடைய கருத்துக்கு பிரக்யா சிங் மன்னிப்பு கோரியுள்ளார். “நான் பாஜகவின் உண்மையான சேவகி, கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே தம்முடைய நிலைப்பாடு. கோட்சே பற்றிக் கூறியது தனது தனிப்பட்ட கருத்து.  யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. யார் மனதாவது புண்படும்படி பேசியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன். நாட்டுக்கு காந்தி செய்த பணிகளை யாரும் மறக்க முடியாது. தனது பேச்சை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டது” என்று அவர் பேசியுள்ளார். 

இதனிடையே பிரக்யா சிங்கின் சர்ச்சை பேச்சு விவகாரம் தொடர்பாக, மத்தியப்பிரதேச மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தலைமைத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com