தேமுதிக சார்பில் விருப்பமனு விநியோகம் தொடக்கம்
கூட்டணி குறித்து இழுபறி நீடிக்கும் நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அரசியல் நிலவரம் சூடிபிடித்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி முடிவுகள் பரபரப்புடன் வெளியாகிக்கொண்டிருக்கிறது. முன்னதாக அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் விருப்ப மனுக்களை விநியோகம் செய்து, அதனை திரும்பவும் பெற்றுவிட்டன. இந்த சூழலில் கூட்டணி குறித்து இழுபறி நீடிக்கும் நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்பமனு விநியோகம் தொடங்கியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்பமனு விநியோகத்தை தொடங்கிவைத்தார். அப்போது, போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் மனு பெற்றனர். மேலும், தேமுதிகவின் துணை செயலாளர் சுதிஷ் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு பெற்றார். மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தேமுதிக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுத் தொகுதிக்கான விருப்பமனுக் கட்டணமாக 20 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக 10 ஆயிரம் ரூபாயும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் எனவும் அக்கட்சியின் தலைமை கூறியுள்ளது.