அதிமுக வேட்பாளர் யார்? - நேர்காணலுக்கு பிறகு பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக வேட்பாளர் யார்? - நேர்காணலுக்கு பிறகு பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுக வேட்பாளர் யார்? - நேர்காணலுக்கு பிறகு பன்னீர்செல்வம் பேட்டி

இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதன் முதலாக அறிவிப்பு வெளியிட்டார். 

இதையடுத்து அமமுக சார்பில் எஸ்.காமராஜ் என்பவர் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர், இன்று நேர்காணல் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், பூண்டி கலைவாணன் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆனால் நேற்றே வேட்பாளர் யார் என பரிசீலிக்கப்படும் ஆட்சி மன்றக்கூட்டம் இன்று ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரணப் பணிகளை தொடரலாம் எனத் தேர்தல் ஆணையம் நேற்று கூறியது. மேலும் நிவாரணப் பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக் கூடாது, தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனிடையே டி.ராஜா தாக்கல் செய்த மனுவையும் கவனத்தில் கொண்டு திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்த அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை அதிமுக சார்பில் வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெற்றது. அதன் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சர், அவைத்தலைவர் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினோம். இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தேர்தலை சந்திக்க பயப்படுவதாக கூறுவது தவறு. வரலாறு படைத்த இயக்கம் என்றைக்குமே பின்வாங்காது. திருவாரூர் இடைத்தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும். இடைத்தேர்தல் வெற்றி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரித்திரத்தை படைக்கும்” எனத் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com