குல்பூஷன் ஜாதவை தீவிரவாதியாக அணுகுவது சரிதானே: சமாஜ்வாடி எம்.பி. பேச்சு
இஸ்லாமாபாத் சிறையில் இருக்கும் குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் அரசு தீவிரவாதியைப் போல் அணுகுவது சரிதான் என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமாபாத் சிறைச்சாலையில் குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி ஆகியோர் டிசம்பர் 25-ம் தேதி சந்தித்தனர். சந்திப்புக்கு பிறகு டெல்லி திரும்பிய ஜாதவின் மனைவி மற்றும் தாயார் பாகிஸ்தான் அரசு மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜூக்கு நன்றி தெரிவித்தனர்.
இதனிடையே, குல்பூஷன் ஜாதவை அவரது மனைவி மற்றும் தாயார் இஸ்லாமாபாத்தில் சந்தித்தபோது பாதுகாப்பு என்ற பெயரில் தாலி, வளையல்களை கழற்ற வைத்தும் நெற்றியில் இருந்தப் பொட்டை அழிக்கச் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
நாடாளு மன்றத்திலும் இந்த விவகாரம் வெடித்தது. பெரும்பான்மையான கட்சிகள் குல்பூஷன் குடும்பத்திற்கு அவமரியாதை செய்யப்பட்டதாக பேசினர். ஆனால் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால், குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் அரசு தீவிரவாதியைப் போல் அணுகுவது சரிதான் என்று கூறினார். நரேஷ் அகர்வாலின் பேசுகையில், “ஏன் எல்லா ஊடகங்களும் குல்பூஷன் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் அரசு ஜாதவை தீவிரவாதி என அறிவித்துள்ளது. தீவிரவாதி என்று அறிவிக்கப்பட்டவரை அந்நாட்டு அரசுக் கடுமையாக அணுகுவது சரியானது. இந்திய அரசும் தீவிரவாதிகளை அதுபோல்தான் அணுக வேண்டும்” என்றார்.
நரேஷ் அகர்வாலின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. நரேஷ் அகர்வால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.