ராஜஸ்தானில் பத்மாவத் ரிலீஸ் ஆகாது: முதல்வர் வசுந்தரா திட்டவட்டம்
ராஜஸ்தானில் பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார்.
பத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை குழு கடந்த மாதம் யு/ஏ சான்றிதழ் அளித்தது. தணிக்கைக் குழு அளித்த பரிந்துரையின் படி பத்மாவத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு சில வசனங்கள் நீக்கப்பட்டன. இதனையடுத்து பத்மாவத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மாவத் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. ராஷ்ட்ரிய கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேன் சிங் கோகமெதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்மாவத் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பத்மாவத் திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று முதலமைச்சர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இது மக்களின் உணர்வுபூர்வமான விஷயாமாக அரசு பார்க்கிறது. ராஜஸ்தானில் படம் ரிலீஸ் ஆவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கடாரியாவுக்கு வலியுறுத்தியுள்ளேன்” என்றார். மேலும், “ராணி பத்மினியின் தியாகம் என்பது மாநிலத்தின் மிகப்பெரிய கௌரவம். எங்களுடைய வரலாற்றில் பத்மினி ஒரு சாதாரண அத்தியாயம் அல்ல” என்று கூறினார்.