5 ஆயிரம் கட்சிகளில் ஒன்றாக ரஜினியும் வரட்டும்: ஓ.எஸ்.மணியன்
நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்ல, கமல்ஹாசன், விஷால் என யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரசிகர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், அரசியலுக்கு தான் புதிதல்ல என்று கூறினார். களத்தில் வெற்றி பெறுவதே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், வெற்றிக்கு வீரம் மட்டுமன்றி வியூகமும் அவசியம் என தெரிவித்தார். அரசியலின் ஆழம் பற்றி அறிந்து வைத்திருப்பதால் தான் அதனுள் வர தயங்குகிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ஆம் தேதி அறிவிப்பேன் என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக நாகையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.எஸ்.மணியன், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யார் வேண்டுமானாலும் வந்து தங்கள் பங்களிப்பை தரலாம். இதில் யாருக்கும் கட்டுப்பாடோ, தடையோ கிடையாது. எனக்குத் தெரிந்த தமிழ்நாட்டில் 5,000 முதல் 6,000 கட்சிகள் வரை உள்ளன. அந்தக் கட்சிகளை அனைவருக்கும் தெரியாது. அதுபோல தற்போது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்ல, கமல்ஹாசன், விஷால் என யார் வேண்டுமானலும் வரட்டும். உடனடியாக வந்து அரசியலை பார்த்துவிட்டு போகாட்டும்” என்று கூறினார்.