சிவாஜி, கமலை விட ஓபிஎஸ் சிறப்பாக நடிக்கிறார்: திமுக விமர்சனம்

சிவாஜி, கமலை விட ஓபிஎஸ் சிறப்பாக நடிக்கிறார்: திமுக விமர்சனம்

சிவாஜி, கமலை விட ஓபிஎஸ் சிறப்பாக நடிக்கிறார்: திமுக விமர்சனம்
Published on

அதிமுகவில் பிளவுபட்டிருக்கும் இரு அணித் தலைவர்களும் ஒரே சமயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், சிவாஜி, கமல்ஹாசனை விட ஓபிஎஸ் சிறப்பாக நடிக்கிறார் என்று பதிலளித்துள்ளார்.

நீர்நிலைகளை தூர்வாருவது தொடர்பாக தமிழக அரசுக்கும் திமுகவிற்கும் இடையேயான பரஸ்பர குற்றச்சாட்டும், கருத்து மோதல்களும் தீவிரமடைந்துள்ளன. திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீர்நிலைகளை மேம்படுத்த அரசு குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். இதனால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் குளங்களை தூர்வாருவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு பயன்தரக்கூடிய நீர்நிலைகளை தூர்வாராமல் சைதாப்பேட்டை கோயில் குளத்தை தூர்வாரியது ஏன் எனவும் ஸ்டாலினை கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். புண்ணியம் தேடவே ஸ்டாலின் கோயில் குளங்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்வதாக் கூறினார்.

மேலும், அதிமுக பிளவுபட்டிருப்பதாக நினைத்து மக்களை தன் பக்கம் ஈர்க்க ஸ்டாலின் நாடகமாடுவதாக அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். ஆட்சியில் இருந்தபோது காவிரி, முல்லைப்பெரியாறு ஆகியவற்றில் திமுக தனது கடைமையை செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

முதலமைச்சரின் விமர்சனம் தொடர்பாக பதில் அளித்துள்ள திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிசாமியின் அறியாமையை வெளிப்படுத்துவதாக கூறியுள்ளார். அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்தின் விமர்சனத்திற்கு பதில் அளித்த இளங்கோவன், நடிகர் சிவாஜி, கமல்ஹாசன் ஆகியோரை விட சிறப்பாக ஓபிஎஸ் சிறப்பாக நடிப்பதாகத் தெரிவித்தார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலினை அதிமுகவின் பிளவுபட்ட இரு அணித் தலைவர்களும் ஒரே நேரத்தில் விமர்சித்திருப்பது அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com