டெல்லி கட்டளைக்கு ஏற்ப ஓபிஎஸ்-ஈபிஎஸ் நடிப்பு: மு.க.ஸ்டாலின்
அதிமுக அணிகள் இணைப்புக்கான கதை வசனம் இயக்கம் டெல்லியிலிருந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணைப்பு இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இரு தரப்பினரும் அதிமுக தலைமை அலுவலகம் வருவதாகவும் கூறப்பட்டது. இணைப்புக்குப் பிறகு இன்றே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கூறப்பட்டது. இதனிடையே சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து அறிவிக்க எடப்பாடி பழனிசாமி அணியினர் தயக்கம் காட்டுவதாக ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். இதனால் அதிமுக அணிகள் இணைப்பில் தாமதம் நிலவுகிறது. இருப்பினும் அணிகள் இணைப்புக்கான முன்னெடுப்பிற்காக முதலமைச்சர் பழனிசாமி அதிமுக தலைமை அலுலவம் விரைந்துள்ளார்.
இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்புக்கான கதை வசனம் இயக்கம் டெல்லியிருந்து வருவதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லி கட்டளைக்கு ஏற்ப ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு நடிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.