புதிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் - தேர்தல் ஆணையம் தகவல்

புதிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் - தேர்தல் ஆணையம் தகவல்
புதிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் - தேர்தல் ஆணையம் தகவல்

2017க்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக பதற்றமான வாக்குச்சாவடிகளின் பட்டியலை வெளியிட முடியாது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திமுக தரப்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கில் 15 வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிவது குறித்து அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும், வாக்குபெட்டிகள் வைக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும், வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை அரசியல் கட்சி நிர்வாகிகளை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை இணையத்தில் நேரலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, பதற்றமான வாக்குச்சாவடி மட்டும் அல்லாமல் அனைத்து வாக்குச் சாவடிகளையும் நேரலை செய்ய வேண்டும், வாக்குப்பதிவு இயந்திர பதிவுகளை மாற்ற முடியும் என வாக்காளர் மத்தியில் அச்சம் உள்ளதால் அவை பாதுகாக்கும் ஸ்ட்ராங் ரூம்களில் ஜாமர் பொருத்த வேண்டும் எனவும் வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிய அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தபட்டு, 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை வெளியிட முடியாது என்றும், அவை உள்ளிட்ட 44 வாக்குச்சாவடிகளின் நேரலை இணையதளத்தில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவித்தார்.

15 வருட பழமையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. 2017ஆம் ஆண்டுக்கு பிறகு தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாகவே மின்னணு வாக்கு இயந்திரங்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மின்னணு வாக்கு இயந்திரங்களை வை-பை மூலமாக தொடர்பு கொண்டு வாக்குப்பதிவில் திருத்தம் செய்ய முடியாது என்பதால் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுக்கப்படும் மையங்களில் ஜாமர் கருவி பொருத்த அவசியமில்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இந்த அறைகளில் மின் கசிவு மூலமாக தீ விபத்து ஏற்படாமல் தடுக்க மின்சாரம் துண்டித்து வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தல் நாளில் கொரோனா தாக்கம் அதிகமாகாமல் இருப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர். அதேபோல சட்டப்பேரவைத் தேர்தல் அமைதியாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்து திமுக-வின் வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com