"அத்வானி தேர்தலில் போட்டியிடாதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்" உமா பாரதி
பாஜக மூத்த தலைவரான அத்வானி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான அத்வானிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் கடந்த முறை போட்டியிட்ட குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் இம்முறை அமித் ஷா போட்டியிடவுள்ளார். இதனால் அத்வானி கட்சியிலிருந்து ஒதுக்கப்படுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பாஜகவில் வயதானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்து வந்தனர்.
அதேபோல பாஜகவின் மூத்த தலைவர்களான சாந்த குமார், பி.சி.கந்தூரி மற்றும் காரியா முண்டா உள்ளிடவர்களும் இம்முறை தேர்தலில் நிறுத்தப்படவில்லை. இவர்கள் அனைவரும் 80 வயதிற்கு மேலானவர்கள். இதனால் அவர்களின் இடத்தில் இளம் தலைவர்கள் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பாஜகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள உமா பாரதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் “அத்வானி தேர்தலில் போட்டியிடாதது குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும். அத்துடன் ஒரு குறிப்பிட்ட வயது வரம்பிற்கு மேல் உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கட்சி எதுவும் அறிவுறத்தவில்லை. மேலும் பல இளம் எம்பிகளுக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து அத்வானி தான் தெளிவு படுத்த வேண்டும்.
மேலும் அத்வானி தேர்தலில் போட்டியிட்டாலும், போட்டியிடவில்லையென்றாலும் கட்சியில் அவருக்கு உள்ள மதிப்பு எப்போதும் குறையாமல் தான் இருக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிகொள்கிறேன். அதுதான் நாட்டிற்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்.