மோடியை சந்தித்த ஒடிசா முதல்வர் : சிறப்பு சலுகைகள் வேண்டி கோரிக்கை
ஐந்தாவது முறையாக ஒடிசாவின் முதலமைச்சராக பதவியேற்ற நவீன் பட்நாயக் டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரையும் சந்தித்தார்.
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் அம்மாநிலத்தின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாக நவீன் பட்நாயக் பதவியேற்றார். அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தற்போது முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மந்திய அரசிடம் சூமுக போக்கை கையாளயுள்ளார்.
இந்நிலையில், நவீன் பட்நாயக் டெல்லியில் இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது ஒடிசா மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் சூறாவளிக் காற்றால் பாதிக்கப்படுவதால், மத்திய அரசு சிறப்பு சலுகைகள் மற்றும் சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் ஒடிசா மாநில வளர்ச்சி குறித்தும் ஆலோசனை செய்தார். இதனைதொடர்ந்து பகல் 12 மணியளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் மரியாதை நிமிர்த்தமாக நவீன் பட்நாயக் சந்தித்தார். வரும் ஜூன் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் நவீன் பட்நாயக் பங்கேற்க உள்ளதால் ஒரு வாரம் வரை அங்கேயே தங்க உள்ளார். பின் நிதி ஆயோக் கூட்டம் முடிந்து அன்று மாலையே புவனேஸ்வர் திரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.