“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி

“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி

“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி
Published on

டிடிவி தினகரனை சந்தித்தது உண்மைதான் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்ததாகவும், மீண்டும் சந்திக்க நேரம் கேட்டதாகவும் தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். அவரது கருத்தை அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும், அப்போது, தர்மயுத்தம் நடத்தியது தவறுதான் என்றும், அதற்காக மன்னிப்புக்கேட்டார் என்றும், டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், கடந்த மாத இறுதியில் இரண்டாவது முறையாகவும் தன்னை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டார் என்றும் கூறினார். 

இந்நிலையில், தினகரன் உடனான சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்  ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “டிடிவி தினகரன் புதுப்பிரச்னையை தாமாக சிந்தித்து, தங்க தமிழ்ச்செல்வனை மூலமாக பேட்டி அளிக்க செய்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை ஓட்டி நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக தொண்டர்களின் எழுச்சியை கண்டு மனக் குழப்பில் இருக்கிறார் தினகரன். 

என் மீது தொடர்ச்சியாக பொய்யான குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழக அரசை பாஜகவோடு சேர்ந்து நான் கலைக்க முயல்வதாக கூறி என்மீது தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். என் மீது சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்த, திட்டமிட்டு குற்றச்சாட்டை தினகரன் கூறி வருகிறார். 

நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். இருக்கும் இடத்தில் விசுவாசமாக இருப்பேன். எந்தக் கட்சியில் இருக்கிறேனோ, அதில் கடைசி வரை இருக்க வேண்டுமென நினைக்கிறேன். நான் தர்மயுத்தம் நடத்தியதே கட்சியில் அந்தக் குடும்பத்தின் தலையீடு இருந்தது என்பதற்காக தான். தற்போதும், அவர்கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக தர்மயுத்தம் நடத்தி வருகிறேன்.

தினகரனுக்கும் எனக்கும் நண்பரான ஒருவர் என்னிடம் வந்து அவர் மனம் விட்டு பேச வேண்டும் என கூரினார்.  அரசியலை விட்டு ஒதுங்கும் நிலையில் தினகரன் இருக்கிறார், ஒருமுறை பாருங்கள் என்று அந்த நண்பர் கூறினார். நூறு முறைக்கு மேல் சொல்லி அனுப்பினார்.  அரசியல் நாகரீகம் கருதி சந்தித்தேன். அந்த நண்பர் வீட்டில் நாங்கள் சந்தித்தோம். மனம் திறந்து நல்ல வார்த்தை பேசுவார் என்று நினைத்துதான் சந்தித்தேன். ஆனால், தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பேசினார். கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், செப்டம்பரில்தான் இரு அணிகளும் இணைந்தோம். அணிகள் இணைந்த பின்னர், அவருடன் ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் இருந்து வருகிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com