“ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை” - ஒபிஎஸ் விளக்கம்

“ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை” - ஒபிஎஸ் விளக்கம்

“ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்படி நடவடிக்கை” - ஒபிஎஸ் விளக்கம்
Published on

மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து மணல் அனுப்புவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து மணல் அனுப்புவதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார். தவறான தகவல்களை கூறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேகதாதுவுக்கு நான் மணல் அனுப்புவதாக ஈவிகேஎஸ் கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். தேர்தல் பரப்புரையில் திமுக கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப மாட்டார்கள். ‘திவீக்’ பத்திரிகையை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். 8 வழிச்சாலை விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடே அதிமுகவின் நிலைப்பாடு.  

தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் என்மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு தகுந்த ஆதாரங்களை தர வேண்டும். இல்லையேல் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முதல்படியாக உயர்நீதிமன்றம் செல்வோம். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் செல்வோம். 

22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என உறுதியாக தெரிவித்து கொள்கிறேன். எந்தக் காலத்திலும் திமுக காங்கிரஸ் கூட்டணியை மக்கள் நம்பமாட்டார்கள். தவறான தகவல்களை பரப்பும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும். காவிரி உரிமையை பெறுவதில் திமுக காங்கிரஸ் வரலாற்று பிழையை செய்துள்ளது.

வாரிசு அரசியல் என்பது தகுதியும் திறமையும் மக்களின் நன்மதிப்பும் பெற்றிருந்தால் வாரிசாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி அவர்கள் அரசியலில் நிலைத்திருப்பார்கள். மக்களின் செல்வாக்கை பெறவில்லையென்றால் அவர்களுக்கு அரசியலில் இடமில்லை” எனத் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com