இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராகிறார். புதிய அமைச்சர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து துணை முதலைச்சராக ஓபிஎஸ் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ’தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சி, மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மஃபா. பாண்டியராஜன் நியமிக்கப்படுள்ளார். இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, பள்ளிக்கல்விதுறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இனி பள்ளிக்கல்வித்துறையை மட்டுமே கவனிப்பார்.
சேவூர் ராமச்சந்திரனிடம் இருந்த வீட்டு வசதித்துறை ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணரெட்டியிடம் இருந்த கால்நடை பராமரிப்புத்துறை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணரெட்டி இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் எம்சி. சம்பத்திடம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை கூடுதல் பொறுப்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொள்ள உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.