செவிலியர்கள் போராட்டம்: அரசியல் கட்சிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம்
செவிலியர்கள் போராட்டத்தில் உண்மையை உணராமல் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என இரண்டாவது நாளாக செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், உயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத்தெருவில் போராட விடுவதா என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “2 ஆண்டுகளுக்கு செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என்பது வழிமுறை. இதுவரை 9,500-க்கும் அதிகமான செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள் பணி நிறைவு பெற்ற 200 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டியுள்ளது. 800 முதல் 1000 செவிலியர்கள் இந்த மாதம் நியமிக்கப்பட உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட தனியார் செவிலியர் கல்லூரியில் படித்தவர்களுக்கும் பணிநியமன ஆணை தரப்படுகிறது. செவிலியர் போராட்டம் பற்றி எதிர்க்கட்சி தலைவர்கள் அவசரக் கோலத்தில் கருத்து தெரிவிக்கின்றனர். இது கண்டனத்திற்குரியது. நீதிமன்ற வழக்குகளால் செவிலியர்கள் பணி நியமனம் தாமதாகியுள்ளது. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு குடிநீர் வழங்கவில்லை என்பது தவறான தகவல்” என தெரிவித்தார்.