சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் ஸ்டாலினுக்கு நோட்டீஸ்
கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ஸ்டாலினும், அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஸ்டாலின் வெற்றி பெற்றதாக சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரணையின்போது மு.க.ஸ்டாலினும், சைதை துரைசாமியும் நான்கு முறை நேரில் ஆஜராகி வழக்கறிஞரின் கேள்விக்கு பதில் அளித்தனர்.
முடிவில் இவ்வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி எம்.வேணுகோபால், சைதை துரைசாமி தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்தார்.
பின்னர் சைதை துரைசாமி சார்பில் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உரிய விளக்கம் கேட்டு மு.க.ஸ்டாலினுக்கும், உயர் நீதிமன்ற பதிவாளருக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

