விதி மீறி விளம்பரம்: கவுதம் காம்பீருக்கு நோட்டீஸ்!
தேர்தல் நடத்தை விதியை மீறி பத்திரிகை விளம்பரம் கொடுக்கப்பட்டதை அடுத்து கவுதம் கம்பீருக்கு டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பில் டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கிரிக்பிளே (CricPlay) என்ற செயலியை பிரபலப்படுத்தும் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த விளம்பரம் ஏப்ரல் 26-ஆம் தேதி, ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. அதில் பணப்பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரமும் அதில் இடம்பெற்றிருந்த வாசகங்களும், தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல் என்று கிழக்கு டெல்லி, ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு கருதியது. இதையடுத்து கவுதம் கம்பீருக்கும், அந்த விளம்பரத்தை வெளி யிட்ட நிறுவனத்துக்கும் கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், செய்தித்தாளில் வெளியிடப்பட்ட விளம்பரத்துக்காகத் தேர்தல் ஆணையத்தின் ஊடகக் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற விவரத்தை நாளைக்குள் (மே 2-ஆம் தேதி) தெரிவிக்க வேண்டும் என்றும் தவறினால் நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.