ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியில்லை: இயக்குநர் அமீர்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டுதயம் ஏற்கனவே தனது வேட்புமனுவினை தாக்கல் செய்துவிட்டார். இதனிடையே புதிய தலைமுறையிடம் நேற்று தொலைபேசி வாயிலாக பேசிய இயக்குநர் அமீர், “தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அப்படி நின்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுவேன். என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து, பிறகு முடிவெடுப்பேன்” என கூறியிருந்தார்.
இதனிடையே ஆர்.கே நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அமீர் போட்டியிடுவது குறித்து ஆலோசிப்போம் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து இருந்தார். அமீருக்கும் தனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை எனவும் சீமான் கூறினார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என இயக்குநர் அமீர் கூறியுள்ளார். மேலும், தனது அரசியல் பயணம் சமூக அநீதிகளை எதிர்த்து போரிடுவதாகவே இருக்கும், நடிகரை எதிர்ப்பது அல்ல என்று அமீர் தெரிவித்தார்.

