தன் பின்னால் பாஜக இல்லை, கடவுளும் மக்களும் தான் இருக்கின்றனர் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இமயமலைக்கு ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்ட ரஜினி இன்று சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய உடன் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்திந்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஆன்மிக பயணம் சென்று வந்த பின்னர் மனம் புத்துணர்ச்சி உடன் இருப்பதாக கூறிய ரஜினி, ‘புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. இதுபோன்ற செயல்களை கண்டிப்பாக செய்யக்கூடாது. கடுமையாக கண்டிக்கின்றேன்’ என்றார்.
ரத யாத்திரை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “தமிழகம் மதசார்பற்ற நாடு. மதக்கலரவத்துக்கு இடம் அளிக்கும் வகையில் எது வந்தாலும் அதனை தடுத்து நிறுத்தனும். மதநல்லிணக்கத்தை போலீசார் பாதுகாக்க வேண்டும். மதக்கலவரம் எந்த வகையில் வந்தாலும் அதனை அரசு தடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.
நீங்கள் ஒரு ஆன்மிக தலைவர், அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் ரத யாத்திரையை எதிர்க்கிறீர் என்ற கேள்விக்கு, மதக்கலவரத்திற்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது என்று பதிலளித்தார். சினிமாத்துறை பிரச்னைகள் குறித்த கேள்விக்கு, ‘வேலைநிறுத்தம் மட்டும் செய்யக் கூடாது. வேலை நிறுத்தம் என்பது எதற்கும் தீர்வாகாது’ என்று கூறினார்.
குறிப்பாக ஏப்ரல் 14ஆம் தேதி கட்சி பெயர் மற்றும் கொடி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்ற செய்திகளை அவர் மறுத்தார்.