பிரதமருக்கு பயப்படாமல் பேச வேண்டும்: அமைச்சர்களுக்கு யஷ்வந்த் சின்ஹா அறிவுரை
உச்சநீதிமன்ற நீதிபதிகள் போல, அமைச்சர்களும் பயத்தை விட்டு பிரதமர் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டுமென பாஜக தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மீதான அதிருப்தி தலைவர்களுள் ஒருவர் பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா . முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர். நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராகக் குற்றம் சாட்டியிருப்பது குறித்து பேசியுள்ள அவர், நீதிபதிகள் இவ்வளவு வெளிப்படையாக பேசியிருப்பது என்பது ஜனநாயகத்தின் அழிவுக்கான எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார்.
அதோடு நில்லாமல், எப்படி தலைமை நீதிபதி தன்னிச்சையாக முடிவு எடுக்கிறாரோ , அதே போல பிரதமர் மோடியும் முடிவெடுக்கிறார், சம அதிகாரம் வாய்ந்த தனது அமைச்சர்களில் தான் முதலில் நிற்கிறேன் என்பதை மட்டும் மறந்து விட்டார் என்று விமர்சித்துள்ளார்.
மேலும், நான்கு நீதிபதிகள் வெளிப்படையாக பேசியுள்ளது போல, மத்திய அமைச்சர்களும் , பிரதமர் மீதான தங்களின் பயத்தை விட்டு வெளியே வந்து பேச வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சராகவும், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது