கொரோனா தொற்றுக்கு ஆளான வேட்பாளர் போட்டியில் நீடிக்க முடியுமா?

கொரோனா தொற்றுக்கு ஆளான வேட்பாளர் போட்டியில் நீடிக்க முடியுமா?
கொரோனா தொற்றுக்கு ஆளான வேட்பாளர் போட்டியில் நீடிக்க முடியுமா?

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் வேட்பாளருக்கு கொரோனா வந்தால் தேர்தல் ஆணையம் என்ன வழிமுறைகளை பின்பற்றும் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

கொரோனா வைரஸ் பரவல் வழக்கமான தேர்தல் நடைமுறைகளை கூட மாற்றி அமைத்திருக்கிறது. கடந்த ஆண்டு நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதே வழிமுறையை பின்பற்றி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது.

வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை வழிமுறைகளை ஏற்கெனவே தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. எனினும் எதிர்பாராத வகையில் மக்கள் நீதி மய்ய வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபுவிற்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் வேட்பாளர்களுக்கு கொரோனா வந்தால் தேர்தல் ஆணையம் என்ன நடைமுறைகளை பின்பற்றும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தின்படி, வேட்பாளர்கள், பரப்புரையில் ஈடுபடும் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும்போது, சுகாதார துறை வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும். தொற்று உறுதியான பின் பரப்புரைகளில் ஈடுபடக் கூடாது. வேட்பாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதியான வேட்பாளர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்குபதிவு நாளன்று வேட்பாளர் தன்னுடைய வாக்கை செலுத்த விரும்பும் பட்சத்தில் கடைசி ஒரு மணி நேரத்தில் வந்து வாக்கை செலுத்தி கொள்ளலாம். அப்படி வருபவர் கண்டிப்பாக பிபிஇ கிட் அணிந்துதான் வர வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com