புதிய நிர்வாகிகளை அறிவிக்க எந்தத் தேவையும் எழவில்லை: ஆர்.பி. உதயகுமார்
டிடிவி தினகரனின் புதிய நிர்வாகிகள் நியமனம் தனி நபர்களை முன்னிலைப்படுத்துவதாக உள்ளது என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பி உதயகுமார், புதிய நிர்வாகிகள் நியமனமானது தனி நபர்களை முன்னிலைப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட அறிவிப்பாகத்தான் இருக்கிறது. ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற நிர்வாகிகளின் ஒத்துழைப்பை பெற முடியவில்லை. அவர்களின் ஒத்துழைப்பை பெறுவதில் தோல்வியடைந்துவிட்டதை ஒத்துக்கொள்வதாக உள்ளது இந்த அறிவிப்பு.
பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்றாலும், அது அறிவிக்கப்பட்ட முறை ஏற்புடையதல்ல. கட்சியின் மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் படியான நடைமுறையில் தான் அறிவிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் தீர்ப்பு வந்ததற்கு பிறகுதான், தேர்தல் ஆணையம் அங்கீகரித்தால்தான், பட்டியல் வெளியிட முடியும் என்பது, அதிமுக தொண்டர்களுக்கும் தெரியும். புதிய நிர்வாகிகளை அறிவிப்பதற்கு தற்போது எந்தத் தேவையும் எழவில்லை என்று கூறினார்.