நடு இரவில் ’பிரேக்கிங் நியூஸ்’: தமிழிசை கோரிக்கை
நடு இரவில் பிரேக்கிங் நியூஸ் வேண்டாம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'டிடிவி தினகரன் கட்சியிலிருந்து ஒதுங்கி இருப்பார் என அமைச்சர் ஒருவர் கூறுகிறார். ஆனால் கட்சிப் பணி ஆற்றுவேன் என தினகரன் கூறுகிறார். கட்சிப் பணி குறித்த இவர்களின் கருத்து வேற்றுமைகள் ஆட்சிப் பணியை எந்தவிதத்திலும் அசைத்து விடக் கூடாது என்பது மக்களின் கவலையாக இருந்து கொண்டிருக்கிறது. நிலையான ஆட்சி முதலில் வேண்டும். நிலையானத் தன்மை வேண்டும். நடு இரவில், பிரேக்கிங் நியூஸ் வேண்டாம்’ என்று தமிழிசை தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக மற்றும் ஆட்சி நலன் கருதி டிடிவி தினகரன் அதிமுகவிலிருந்து தொடர்ந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். ஆனால் டிடிவி தினகரனோ, தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு என்றும் மீண்டும் கட்சிப் பணிகளை ஆற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.