நிதிஷ் ராஜினாமா முதல் பதவியேற்பு வரை: ஓர் இரவில் நடந்தது என்ன?
நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததில் இருந்து இன்று காலை பாஜகவுடன் இணைந்து பதவியேற்றுக் கொண்டது வரை, இந்த ஓர் இரவில் நடந்த சம்பவங்களைப் பார்க்கலாம்.
நேற்று மாலை 6:45 மணிக்கு, பீகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியைச் சந்தித்த நிதிஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். 7 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜினாமா செய்யப் போவதாக லாலு பிரசாத்திடமும், பீகார் காங்கிரஸ் தலைவர் சி.பி. ஜோஷியிடம் தெரிவித்ததாகக் கூறினார். 7.10-க்கு நிதிஷ் குமாரின் முடிவை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, ஊழலுக்கு எதிரான போரில் இணைந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார். இரவு 7.22-க்கு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும், நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவித்தன. அதனை நிதிஷ் குமார் ஏற்றுக் கொண்டார்.
7.30-க்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் அவசரமாகக் கூடி பீகார் நிலைமை குறித்து விவாதித்தது. இரவு எட்டு மணிக்கு பாரதிய ஜனதா கட்சி நிதிஷின் முடிவை வரவேற்றது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என குறிப்பிட்ட பாஜக, பீகாரில் இடைத் தேர்தல் வருவதை விரும்பவில்லை என்றும் கூறியது. பீகார் நிலைமை குறித்து கவனித்து தலைமைக்கு அறிக்கை அளிக்க 3 உறுப்பினர் குழுவையும் பாஜக நியமித்தது. இரவு 8.05-க்கு காங்கிரஸ் கட்சி தனது கருத்தை வெளியிட்டது. மகா கூட்டணி பீகாரை 5 ஆண்டுகளுக்கு ஆள வேண்டும் என்பதே மக்கள் அளித்த தீர்ப்பு என்று கூறிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, மக்களின் தீர்ப்புக்கு காங்கிரஸ் மதிப்பளிப்பதாக கூறினார்.
இரவு 8.10-க்கு செய்தியாளர்களைச் சந்தித்த ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், நிதிஷ் பாஜக, ஆர்எஸ்எஸ்சுடன் சேர்ந்து விட்டதாக விமர்சித்தார். ராஜினாமா செய்த உடன், நிதிஷை, பிரதமர் மோடி வாழ்த்தியதையும் லாலு சுட்டிக்காட்டினார். இரவு 8.25-க்கு பீகார் நிலை குறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி, எம்எல்ஏக்கள் இடைத்தேர்தல் வருவதை விரும்பவில்லை என்று கூறினார். பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் தொடர, பாஜக ஆதரவளிப்பதாக கூறிய சுஷில் மோடி, பாஜகவும் ஆட்சியில் பங்கு பெறும் என அறிவித்தார். 8.35-க்கு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத், லாலுவின் அரசியலில் நேர்மையும் இல்லை, கொள்கையும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.
இரவு 10.30-க்கு நிதிஷ்க்கு ஆதரவு அளிப்பதற்கான கடிதத்தை, ஆளுநரிடம் வழங்கியது பாரதிய ஜனதா. 11.45-க்கு வியாழனன்று ஆட்சியமைக்க நிதிஷ் உரிமை கோருவார் என ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. நள்ளிரவு 12.15-க்கு தனிப்பெரும் கட்சி என்ற முறையில், ஆட்சியமைக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் உரிமை கோரும் என தேஜஸ்வி அறிவித்தார். பின்னிரவு 12.30-க்கு ஆட்சியமைக்க ஆளுநர், நிதிஷ்க்கு அழைப்பு விடுத்தார். இதற்கு தேஜஸ்வி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தேஜஸ்வி மற்றும் 5 ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏக்களை பேச்சுவார்த்தை நடத்த ஆளுநர் திரிபாதி அழைத்தார்.
பின்னிரவு 1:00 மணிக்கு தேஜஸ்வி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். நிதிஷ் குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் முடிவை நிறுத்தி வைக்குமாறும் பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு முதல் வாய்ப்பு தருமாறும் ஆளுநரை தேஜஸ்வி கேட்டுக்கொண்டார். ஆனால் ஆளுநர் கேசரிநாத் திரிபாதி, நிதிஷ் குமாரையே மீண்டும் பதவியேற்க அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இன்று காலை பத்து மணிக்கு பீகார் முதலமைச்சராக நிதிஷ் பதவியேற்றார்.