துளிர்க்கும் நம்பிக்கை: உணவின்றி தவித்தவர்களுக்கு உதவிய 'பூம்', 'அஸ்வின்ஸ்' அமைப்புகள்
மதுரையில் 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' இயக்கம் மூலம் உதவி கோரிய 6 குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது பூம் தொண்டு நிறுவனம். இதேபோல், பெரம்பலூரில் பெண் கூலித் தொழிலாளி குடும்பத்திற்கு 'அஸ்வின்ஸ்' நிறுவனம் சார்பில் அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
மதுரை கட்டபொம்மன் நகர், செல்லூர், நெல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏழை, எளியோர் மற்றும் ஆதரவற்ற முதியோர் உள்ளிட்ட 6 குடும்பத்தினர் கொரோனோ பொதுமுடக்கம் காரணமாக வேலை வாய்ப்பை இழந்து உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' குழுவிற்கு உதவி வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' குழுவுடன் மதுரை பூம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஷர்மிளா தனது சொந்த செலவில் 6 குடும்பத்திற்கு 6 நாட்களுக்கு தேவையான அரசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினார். தொடர்ந்து 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலம் மக்களுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் பூம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பானு என்பவர், ஊரடங்கால் வேலை இழந்து மூன்று குழந்தைகளுடன் மிகவும் சிரமப்படுவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு பெரம்பலூர் அஸ்வின்ஸ் பேக்கரி உணவகம் சார்பில் அதன் தலைவர் கே.ஆர்.வி.கணேசன், ஒரு சிப்பம் அரிசி, ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார்.
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'
- ஜி.கணேஷ்குமார், ஆ.துரைசாமி