எம்ஜிஆர் சிலைக்கு புதிய பூட்டு போட்ட ஈபிஎஸ் அணி: கோபத்தின் உச்சத்தில் டிடிவி அணி
தருமபுரி மாவட்டம் அரூரில் ஈபிஎஸ் அணியினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலையணிவித்து விட்டு, பாதுகாப்பு வளையத்திற்கு புதிதாக ஒரு பூட்டைப் போட்டு பூட்டிச் சென்ற சம்பவம் தினகரன் அணியினரிடம் கோபத்தை ஏற்படுத்தியது.
அதிமுகவின் 46-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஈபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் இன்று காலை அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது பாதுகாப்பு வளையத்தின் சாவியை, பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பெற்று வந்த அவர்கள் அதன் பின் பாதுகாப்பு வளையத்தை திறந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து அருகில் இருந்தவர்களுக்கும் இனிப்புகளை வழங்கினர்.
இதன்பின் தினகரன் அணியினர் வருவதை அறிந்த அவர்கள், பாதுகாப்பு வளையத்திற்கு புதிய பூட்டு ஒன்றை போட்டு பூட்டிச் சென்றனர். பின்னர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையணிவிக்க வந்த தினகரன் அணியினர் சிலையின் பாதுகாப்பு வளையம் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்ததோடு, போலி சாவி கொண்டு பாதுகாப்பு வளையத்தை திறந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.