சுயநலத்துக்காக கட்சி அதிகாரத்தை பயன்படுத்தியதில்லை: ஓபிஎஸ் இளையமகன் ஜெயபிரதீப்
அதிமுகவில் தமக்கு நெருக்கமானவர்களின் அதிகாரத்தை சுயநலத்துக்காக ஆட்சி நிர்வாகத்திலோ கட்சி நிர்வாகத்திலோ பயன்படுத்தியதில்லை என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
ஜெயபிரதீப் அதிமுக சார்பில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட 200-க்கும் அதிகமான விருப்ப மனுக்களை கட்சியினர் தாக்கல் செய்திருந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஜெயபிரதீப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 30 ஆண்டுகளாக அதிமுகவில் இருப்பதாகவும், 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியில் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை என்றும், கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் என யாரிடமும் எதற்காகவும் போய் நின்றதில்லை என்றும் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார். தமது சுயநலத்துக்காக ஆட்சி மற்றும் கட்சி அதிகாரத்தை பயன்படுத்தியது இல்லை என்றும், அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும் இயற்கை வளங்களை மேம்படுத்தும் செயல்களிலும் வாழ்நாள் முழுவதும் ஈடுபட உள்ளதாகவும் வீடியோவில் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.