முதல்வராவதற்கு ஸ்டாலின் போட்ட வேடங்கள் எடுபடவில்லை: ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சர் பதவியில் அமர ஸ்டாலின் போட்ட பல்வேறு வேடங்கள் மக்களிடம் எடுபடவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
நெல்லையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது பேசிய பன்னீர்செல்வம், தமிழக மக்களின் இதயங்களில் மக்கள் திலகமாக விளங்குபவர் எம்.ஜி.ஆர் என்றும், அவரைப் போலவே மக்களுக்கு வாரி வழங்கிய அட்சயப் பாத்திரம் ஜெயலலிதா என்றும் புகழுரை சூட்டினார். அத்துடன் மக்கள் மனதில் மறக்க முடியாத மாபெரும் தலைவராக எம்ஜிஆர் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மக்கள் ராமச்சந்திர ஜெயந்தியாக கொண்டாடுவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பன்னீர்செல்வம், முதலமைச்சர் பதவியில் அமர ஸ்டாலின் போட்ட பல்வேறு வேடங்கள் மக்களிடம் எடுபடவில்லை என்று விமர்சித்தார். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி தொடரக்கூடாது என பலரும் திட்டம்போட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக அழிந்து விடும் என ஸ்டாலின் கருதியதாகவும், ஆனால் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் அதிமுக ஆட்சி தொடர்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.