நெல்லை: பறக்கும்படை வாகன சோதனையில் சிக்கிய 12.89 கோடி மதிப்பிலான தங்க நகை பறிமுதல்
நெல்லை டக்கரம்மாள்புரம் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மதுரையில் இருந்து நாகர்கோவில் சென்ற தனியார் நிறுவன வாகனத்தில் 12 கோடியே 89 லட்சம் மதிப்பிலான நகை பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் சோதனைச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் சிறப்பு வட்டாட்சியர் லட்சுமி தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் சுமார் 12 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நகையின் மதிப்பு அதிகம் என்பதால் பறக்கும் படை அதிகாரிகள் வருமானவரித்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும் விசாரணையில் அந்த வாகனம் மதுரை விமான நிலையத்தில் இருந்து நாகர்கோவிலில் உள்ள நகைகடைகளுக்கு தனியார் நிறுவனம் மூலம் நகைகள் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஆவணங்கள், நகையின் எடை ஆகியவற்றை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆவணங்களில் திருப்தி இல்லாததால் நகையுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பாளையங்கோட்டை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நகைகளை கைப்பற்றிய வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறக்கும்படை சோதனையில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகை சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.