“நீட் தமிழகத்திற்கு ஒரு தீங்கு” வைகோ பாய்ச்சல்
தமிழகத்தில் இனி கடுமையான போராட்டக் களங்கள் உள்ளன என்பதால் இளைஞர்கள் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியைச் சேர்ந்த மதிமுகவை சேர்ந்த ஜகுபர்அலி என்பவர் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் வைகோவை தரக்குறைவான முறையில் மீம்ஸ் போடுவதை கண்டித்தும் நேன்று மாலை தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயன்று தற்போது அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்று வரும் ஜகுபர் அலியை தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவரது குடும்பத்திற்கு மதிமுக சார்பில் 20 ஆயிரம் ருபாய் நிதியும் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ “சமீபகாலமாக நியூட்ரினோ, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீட் பிரச்னை தொடர்பாக பல இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். இது வேதனைக்குறியதாக உள்ளது. தமிழகத்தில் இனி கடுமையான போராட்ட களங்கள் அதிகமாக உள்ளது. எனவே இளைஞர்கள் தங்களுடைய உயிர்களை மாய்த்துகொள்ளாதீர்கள். எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது, உயிர் துணிந்து வாழ்ந்து போராடுவோம்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் “மத்திய அரசு தமிழகத்தை பழிவாங்கும் நோக்கத்தோடுதான் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது என்றும் நீட் தேர்வு என்பது தமிழகத்தின் சமூகநீதிக்கான கேடு, தமிழகத்தில் இல்லாத தேர்வு மையங்களா? சிபிஎஸ்இ நீதிமன்ற தீர்ப்பை மீறி உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனிதாபிமானமற்றவர்கள். மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடுதான் திட்டமிட்டு தேர்வு மையங்களை வேறு மாநிலத்தில் அமைத்து மாணவர்களை மத்திய அரசு பழிவாங்கியுள்ளது. தற்போது மனித உரிமை ஆணையம் இது குறித்து நோட்டீஸ் அளித்துள்ளது. அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை தற்போது கூற முடியாது. ஆனால் நீட் தமிழகத்திற்கு ஒரு தீங்கு” என்றும் அவர் தெரிவித்தார்.