நவோதயா பள்ளிகளால் இந்தித் திணிப்புக்கு வாய்ப்பு: திருமாவளவன்
நவோதயா பள்ளி தொடங்கப்படுவதன் மூலம் பள்ளிகளில் இந்தித் திணிப்புக்கு வாய்ப்புள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தொடங்க உயர்நீதிமன்றக் கிளை இன்று அனுமதி அளித்துள்ளது. மேலும், நவோதயா பள்ளிகள் தொடங்க மத்திய அரசுக்கு ஒத்துழைக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், நவோதயா பள்ளி தொடங்க சட்டப்பூர்வமாக அனுமதி பெற்றுள்ளனர் என்பது அதிர்ச்சி தருகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். அதேபோல், மதவாத திணிப்பு அரசியலில் மத்திய அரசு ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
நவோதயா பள்ளிகள் தொடங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று கூறிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இதன் மூலம் தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மத்திய அரசின் தரமான கல்வி கிடைக்கும் என்றார்.
நாடு முழுவதும் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் நவோதயா பள்ளிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.