நத்தம்: ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த ஐஜேகே வேட்பாளர்
நத்தத்தில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர், ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்வது தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் பரபரப்புடன் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நந்தம் தொகுதியின் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்ராஜ் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலையிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
முன்னாதாக நத்தம் மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்து ஜல்லிக்கட்டு காளைகளுடன் தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தர். இதில் கூட்டணி கட்சிகளான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் உடன் வந்திருந்தனர். ஊர்வலத்தில் வந்த அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது.