கடற்படை கப்பலை சொந்த வேலைக்கு பயன்படுத்தியவர் ராஜீவ் காந்தி : பிரதமர் மோடி
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இந்திய கடற்படையை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தொடர்ந்து வாரிசு அரசியலை முன்னிறுத்தி வருகிறது என்று சாடினார். தமது ஐந்து ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் நடக்கவிருந்த பல்வேறு தாக்குதல்களை பாதுகாப்புப் படையினர் சிறப்பாக தடுத்து நிறுத்தினர் என்றும், சாத்தியமே இல்லை என கருதப்பட்ட மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரம் தற்போது சாத்தியமாகி இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், வாரிசு அரசியல், இடதுசாரி அரசியல், பண அரசியல், வளர்ச்சிக்கான அரசியல் என்ற நான்கு நிலைகளை கடந்து ஐந்தாவதாக செயல்படாத அரசியல் ஆம் ஆத்மி கட்சியால் டெல்லியில் நடந்து வருகிறது என்று பிரதமர் மோடி விமர்சித்தார். நாட்டின் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்ட ஐஎன்எஸ் விராட் போர்க் கப்பலை சொந்த கப்பலாக பயன்படுத்தி அதன் கண்ணியத்தை அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அவமதித்தார் என்றும், குடும்பத்துடன் 10 நாள் விடுமுறைக்காக அந்தப் கப்பலில் தான் பயணித்தார் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.