"தமிழக அரசியலில் உதயநிதி தவிர்க்க முடியாதவர். ஏனெனில்" - நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி!

"தமிழக அரசியலில் உதயநிதி தவிர்க்க முடியாதவர். ஏனெனில்" - நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி!
"தமிழக அரசியலில் உதயநிதி தவிர்க்க முடியாதவர். ஏனெனில்" - நாஞ்சில் சம்பத் சிறப்புப் பேட்டி!

'அண்ணன் ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வராக அமர்வார். திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும். மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும். மோடியின் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் இடத்தில் திமுக விஸ்வரூபமெடுக்கும். பாருங்கள்' என்று அதிரடியாக பேசுகிறார், நாஞ்சில் சம்பத். அமமுகவில் இருந்து விலகி திமுக ஆதரவாளராக மாறியிருக்கும் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.


திமுகவில் இணையப்போகிறேன் என்றீர்களே?

"என்னுடைய இலக்கியப் பணி, எழுத்துப் பணி, நடிப்புப் பணி போன்ற அனைத்தும் கட்சியில் இணைந்தால் அடிப்பட்டு போய்விடும். அதனால், இப்போதைக்கு திமுகவில் இணையவில்லை. ஆனால், வகுப்புவாத சக்திகளை எதிர்க்க திமுகவை ஆதரித்து சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்யப்போறேன். வரும் 25-ஆம் தேதி திமுகவின் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திலும் பேசப்போகிறேன். கட்சி உறுப்பினர் ஆகாமலேயே என்னால் திமுகவுக்கு வலிமை சேர்க்க முடியும். வலிமை வாய்ந்த ஒரு பிரசாகராக இருப்பேன். எனக்கு அந்தத் தகுதி இருக்கிறது."

திமுக, மதிமுக, அதிமுக, அமமுக... தற்போது மீண்டும் திமுக நிலைப்பாட்டில் இருக்க என்ன காரணம்?

"மாநில உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் கொடிய மோடியின் ஆட்சிக்கு எதிராக இந்திய மக்களை அணி திரட்டக் கூடிய வரலாற்று கடமைக்கு தென்னகத்தில் தலைமை தாங்குகின்ற அமைப்பு திமுகதான். அது பலம் பெற்றால் இந்தியாவின் கூட்டாச்சி தத்துவத்தை வென்றெடுக்க முடியும். அண்ணன் ஸ்டாலினும் மதசார்பற்ற கட்சிகள் ஊடுறுவக்கூடாது என்பதில் உறுதியோடு இருக்கிறார். மதவாத சக்திகளை எதிர்க்கும் காரணத்தாலேயே திமுகவை ஆதரிக்கிறேன்."

வேறு கட்சிகளில் இணைய அழைப்பு வந்ததா?

"எல்லா கட்சிகளிலும் இணைய அழைக்கும் இடத்தில் நான் இருக்கின்றேன். என்னுடைய தனித்தன்மையா? தமிழின் ஆற்றலா என்பது எனக்கு புரியவில்லை. நிறைய அழைப்புகள் வருகின்றன."

வைகோவிடம் இடையில் பேசினீர்களா? கட்சிக்கு அழைத்தாரா?

"அவரிடம் பேசவும் இல்லை. மீண்டும் மதிமுகவுக்கு அழைக்கவுமில்லை."

திமுகவுக்கு பிரசாரம் செய்யும்போது ஒரே மேடையில் வைகோவை பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமே?

"அப்படி ஒரு சூழ்நிலை வராது என்றே நினைக்கிறேன். அப்படி வந்தாலும் நான் இருக்கமாட்டேன்."

தமிழகத்திற்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக வெளியான தகவல்களால் சலசலப்பு எழுந்ததே...

"தமிழக தேர்தல் ஆணையர் அப்படி இல்லை என்று சொல்லி இருந்தாலும், இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் விருப்பம். அப்போதுதான், கள்ள ஓட்டு போடமுடியும் என்று நினைக்கிறது. தமிழகத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்ததே இல்லை. ஒரேகட்டமாக தேர்தல் நடத்தவேண்டும் என்பதே தமிழக மக்கள் விருப்பம்."

திமுகவில் மு.க ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதி முன்னிறுத்தப்படுகிறாரே? ஒரு மூத்த அரசியல்வாதியாக எப்படி பார்க்கிறீர்கள்?

"ஏன் ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் மகனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே? பீஹாரில் தேஜஸ்வி யாதவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையா? உதயநிதியை மட்டும் குறிப்பிடுவது ஏன்?

தமிழக அரசியலில் உதயநிதி ஸ்டாலின் தவிர்க்க முடியாதவர். திமுக இளைஞரணியை அண்ணன் ஸ்டாலின் விரும்புகின்ற திசையை நோக்கி அழைத்துச் செல்கின்ற ஆற்றலும் அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற பண்பும் உதயநிதிக்கு உண்டு. அவரது திரையுலக பிம்பமும் அவரது பிரசாரத்துக்கு பெரிய வரவேற்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்திருக்கிறது. யாரையும் மட்டம் தட்டவேண்டும், குறைத்து மதிப்பிட வேண்டும் என்று கருதாமல் உதயநிதி ஸ்டாலின் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அவர்மீது எந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கும் வாய்ப்பில்லை. மாற்றுக் கருத்துடையோரின் கருத்துகளையும் கேட்டு நடுநிலையோடு செயல்பட கருதுகிறார்.

ஸ்டாலினுக்கு அடுத்து என்று கேள்வி எழவேண்டிய அவசியம் இப்போது இல்லை. அண்ணன் ஸ்டாலினுக்கு 68 வயதுதான் ஆகிறது. அவர் இன்னும் கலைஞர் மாதிரி திமுகவுக்கும் தமிழகத்திற்கும் தொண்டாற்றப் போகிறார். அதனால், ஸ்டாலினுக்கு அடுத்து ஸ்டாலினுக்குப் பிறகு என்ற கேள்விக்கே அவசியமில்லை."

ஆனால், மு.க ஸ்டாலின் எந்தக் காலத்திலும் முதல்வர் ஆகமாட்டார் என்கிறாரே ஓபிஎஸ்?

"ஓ.பி.எஸ் முதல்வர் ஆகமுடியாத நிலையில் முடக்கப்பட்டிருகிறார். அந்த மன உளைச்சலில் உளறிக்கொட்டுகிறார். அவரது பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள வேண்டாம்."

இதுவரை சட்டமன்ற உறுப்பினராகவில்லையே என்கின்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

"சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் செல்வாக்கு, புகழை விட நாஞ்சில் சம்பத் செல்வாக்கோடும் புகழோடும்தான் இருக்கிறேன். அவர்கள் சாதித்ததைவிட என்னால் அதிகமாக சாதிக்க முடியும். சட்டமன்றத்தைவிட மக்கள் மன்றத்தைதான் மதிப்பேன். எனக்கு எந்த வருத்தமும் இல்லை, எந்தக் காயமும் இல்லை."

'ரஜினி அரசியலுக்கு வரமட்டார். பார்த்துக்கொண்டே இருங்கள்' என்று நீங்கள் கூறியது போலவே ரஜினி வரவில்லையே?

"ரஜினி வருவதற்கு எந்த விதமான மூலதனமும் இல்லை. வயதான ரசிகர்களை வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. மண் சார்ந்து, மொழி சார்ந்து ரஜினி சிந்திக்கவில்லை. தமிழர்களின் உரிமை போராட்டங்களைக் கொச்சைப்படுத்தினார். இப்படி தமிழகத்தின் நலனில் அக்கறை இல்லாத ரஜினி கட்சி தொடங்கமாட்டார் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதுதான் நடந்திருக்கிறது. இப்போதும், ஒன்று சொல்கிறேன். அண்ணன் ஸ்டாலின்தான் தமிழகத்தின் முதல்வராக அமர்வார்."

இப்போது, என்னென்ன படத்தில் நடிக்கிறீர்கள்?

ஆர்.ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி', சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா' என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன். அடுத்து ஸ்ரீகாந்த் நடிக்கும் 'சம்பவம்' என்ற படத்தில் நடிக்கவிருக்கிறேன். அடுத்து எடிட்டர் கோபி கிருஷ்ணா இயக்கும் படத்தில் தமிழாசிரியர் வேடத்தில் நடிக்கவிருக்கிறேன்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com