“ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள்” - நாஞ்சில் சம்பத்

“ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள்” - நாஞ்சில் சம்பத்

“ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள்” - நாஞ்சில் சம்பத்
Published on

மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத், 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவர் மறைவுக்குப் பின் சசிகலா தலைமையிலும், டிடிவி தினகரன் அணியிலும் செயல்பட்டு வந்தார். டிடிவி அணியில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாஞ்சில் சம்பத், “இன்னல் சூழ்ந்த காலகட்டத்தில் டிடிவி தினகரனுக்கு துணை நின்றேன், தோள் கொடுத்தேன். அநியாயமாக அவர் பழி வாங்கப்பட்டப் பொழுது அவருக்கு பக்கபலமாகவும், தக்க துணையாகவும் இருக்க தீர்மானித்தேன். அவரை சிகரத்திற்குக் கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன். ஆனால் ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவை பார்ப்பதை போன்றுதான் என்னைப் பார்த்தார்கள். என்னை விரும்பாத இடத்தில் இருக்க விருப்பம் இல்லை, அதனால்தான் கவலையோடு வெளியேறினேன்” எனத் தெரிவித்து இருந்தார்.

அதேபோல், தான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை எனவும் நாஞ்சில் சம்பத் அறிவித்தார். இதுகுறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்திருந்த பேட்டி ஒன்றில், “அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு கட்சி நடத்தாலம் என்று டிடிவி தினகரன் நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துகள். நான் இனிமேல் அதில் இல்லை. நான் இ்னி எந்த அரசியலிலும் இல்லை. நான் இதற்காக எதிர்வினை ஆற்றபோவதும் இல்லை. டிடிவி தினகரன் பச்சைப் படுகொலையை செய்திருக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன். இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, சமீப காலமாக அரசியலில் இருந்து நாஞ்சில் சம்பத் ஒதுங்கி இருந்தார். இருப்பினும் மதிமுகவில் அவர் இணைவதாக தகவல்கள் வெளியானது. இதனை நாஞ்சில் சம்பத் மறுத்துவிட்டார். இதனிடையே, சென்னையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவர் சந்தித்து பேசினார். இதனால், மீண்டும் அவர் மதிமுகவில் இணையப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் வைகோவை புகழ்ந்து நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார். நாஞ்சில் சம்பத் தனது ட்விட்டரில், “மக்கள் மன்றத்திலும் நீதி மன்றத்திலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்பொழுது நீதிமன்றத்தின் வாசலிலும் அரசாங்கத்தின் தாழ்வாரங்களிலும் தவம் கிடக்கிறது வேதாந்தா நிர்வாகம். இப்பொழுது மூடி இருப்பது இடைக்கால ஏற்பாடு” என்று கூறியுள்ளார். 

மற்றொரு ட்விட்டில், “இன்னொரு நாள் அது மூடப்படும். அப்போது ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள். குட்டிச்சுவர்கள் ஒருகாலமும் கோபுரம் ஆவதில்லை. குட்டை ஒருக்காலும் சமுத்திரம் ஆவதில்லை” என்றும் நாஞ்சில் சம்பத் வைகோவை புகழ்ந்துள்ளார். இதனால் அரசியலில் இனி இல்லை என்ற கூறிய நாஞ்சில் சம்பத் அதனை மீறி மீண்டும் அரசியலில் இறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com